பாகன் இறப்பால் தீவிர கண்காணிப்பு - 11 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த தெய்வானை யானை
தீவிர கண்காணிப்பில் இருந்த திருச்செந்தூர் கோவில் யானை வெளியே அழைத்து வரப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் யானை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த கோவிலில் 2006 ஆம் ஆண்டு முதல் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் திருக்கோயில் வளாகத்தில் உலா வருவது வழக்கம்.
பாகன் உயிரிழப்பு
இந்நிலையில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி, யானையின் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் யானை அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற போது யானை தாக்கியதில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார். மேலும், பக்தர்கள் யானை அருகே செல்ல கூடாது, யானையை வாரம் 4 முறை குளிப்பாட்ட வேண்டும் என யானை பராமரிப்பு தொடர்பாக 39 அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாகங்களுக்கு வழங்கியது.
வெளியே வந்த யானை
இதனையடுத்து 18 ஆம் தேதி முதல் கால்நடை மருத்துவர்கள் குழு மற்றும் வனத்துறை அலுவலர்கள் யானையை கண்காணித்து வந்தனர். யானைப் பாகன்கள் ராதாகிருஷ்ணன், செந்தில் ஆகியோர் யானைக்கூடத்தில் வைத்தே யானையை குளிப்பாட்டி, உணவு வழங்கி வருகின்றனர்.
தற்போது யானை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், ஆனந்த விலாச மண்டபத்தில் யானைக்காக சிறப்பு யாகம், பூஜைகள் நடத்தப்பட்டது. 11 நாட்களுக்கு பிறகு மண்டபத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட தெய்வானை யானையை பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.