பெண் யானைக்கு மதம் பிடிக்காது; ஆனால் தாக்கியது ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்
பெண் யானைக்கு மதம் பிடிக்காத நிலையில் யானை ஏன் தாக்கியது என சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர்.
திருச்செந்தூர் கோவில் யானை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த கோவிலில் வளர்க்கப்பட்டு வந்த 26 வயதான தெய்வானை என்கிற யானை, இன்று(18.11.2024) மாலை திடீரென யானையின் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலனை தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
யானை முன் செல்ஃபி
இதனையடுத்து கோவிலுக்கு வந்த வன அலுவலர்கள் பெண் யானைக்கு மதம் பிடிக்காது என்ற நிலையில் யானை ஏன் இவ்வாறு நடந்து கொண்டது என்பது குறித்து ஆய்வு செய்தனர். விசாரணையில் யானை கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில் பாகனின் உறவினர் சிசுபாலன் யானை முன்பு நின்று நீண்ட நேரம் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த யானை சிசுபாலனை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது. சிசுபாலனை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுவாக அந்த யானை வழக்கமாக கவனிக்கும் 3 பாகன்களை தவிர மற்ற யாரையும் கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்காதாம். 2 மாதங்களுக்கு முன்பே சிசுபாலன் உள்ளே வர முயற்சித்த போது யானை அவரை தள்ளி விட்டதாக இறந்த உதயகுமார் சக பாகன்களிடம் முன்பே தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.