பைக்கில் 3 பேர் செல்லலாமா? மத்திய அமைச்சர் அதிரடி விளக்கம்!
பைக்கில் 3 பேர் செல்ல அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பைக்கில் 3 பேர்
அண்டை மாநிலமான கேரளா சாலை போக்குவரத்து பாதுகாப்பில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் வரிசையில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மூன்றாவது நபராக ஏற்றி செல்லும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று கேரள அரசு முடிவு செய்தது.

தொடர்ந்து, அபராதம் விதிப்பதில் இருந்து விதிவிலக்குக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றையும் கேரள அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் எழுதியிருந்தார். இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி,
அனுமதி?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி எளமரம் கரீம் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.

கார் வாங்கும் வசதி இங்குள்ள பெரும்பாலான மக்களிடம் இல்லை. எனவே, சாலை பாதுகாப்பு விதிகளை ஒழுங்காக கடைபிடித்து, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை 3வது நபராக அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் கீழ் இது தடை செய்யப்பட்டது. உலகம் முழுவதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.