வேலைக்கு ஆட்கள் தேவை...திரண்டு வந்து ஆயிரம் பேர் போட்டி; பயங்கர தள்ளுமுள்ளு - viral video!
காலி பணியிடங்களுக்கு ஆயிரம் பேர் போட்டி போட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஆட்கள் தேவை
குஜராத்தில் பரூச் பகுதியில் ஜாகாதியா என்ற இடத்தில் ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் மொத்தம் இருந்த 10 காலி பணியிடங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான நேர்காணல் நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்கு 1,800 பேருக்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுள்ளனர்.
அவர்கள், அங்கலேஷ்வர் பகுதியில் நேர்காணல் நடந்த தனியார் ஓட்டலின் நுழைவு வாசலில் முண்டியடித்து உள்ளே புகுந்தனர். பலர் கதவுக்கு வெளியே ஒருவரையொருவர் முட்டி, மோதியபடி நின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களால் நிற்க முடியாமல் கீழே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தள்ளுமுள்ளு
இந்த நிலையில், அவர்கள் ஏறியதில் தடுப்புக்காக போடப்பட்டிருந்த உலோக வேலியும் சரிந்து விழுந்தது. இதில், சிலர் கீழே குதித்து தப்பினர். இந்த சம்பவம் பற்றி காங்கிரஸ் கட்சியினர் தனது எக்ஸ் தல பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, ஆளும் பா.ஜ.க.வை கடுமையாக சாடியுள்ளது.
நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை காணப்படுகிறது என குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளது. இதற்கு பா.ஜ.க. எம்.பி. மன்சுக் வசாவா கூறும்போது, 10 காலியிடங்களை அவர்கள் நிரப்புகிறார்கள்.
அதற்கு முறையான விசயங்களை அவர்கள் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அந்த நிறுவனமே சம்பவத்திற்கு காரணம். இது வேதனை தருகிறது. இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.