ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம் - தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம்
தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. சுமார் 25,000 பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50,000 பேர் கலந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
டிக்கெட் வாங்கிய பல ரசிகர்களும் உள்ளே செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த நிகழ்சசியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் சமூக வலைத்தளங்களில் பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
அதில் "சம்பந்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தாதது, வாகன நிறுத்த ஏற்பாடுகளை சரிவர செய்யாதது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே போல் கூட்ட நெரிசலில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக வெளியான செய்திகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, பொதுமக்களுக்கு இத்தனை சிரமங்களை ஏற்படுத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், தமிழக அரசு அதனை கண்காணித்து உறுதி செய்திருக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால் இருதரப்பும் தங்கள் கடமைகளில் இருந்து தவறியதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தி.மு.க. அரசு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒரு சட்டம் எனவும், தங்களை சாராதவர்களுக்கு ஒரு சட்டம் எனவும் பாகுபாட்டுடன் செயல்படுவதாகவும், குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களை கண்டும் காணாமல் இருந்து வருவதாகவும்" அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.