முதல்வருக்கு வெள்ளத்தைவிட இதுதான் முக்கியம் - திருமாவளவன் ஆவேசம்!
முதல்வருக்கு இந்தியா கூட்டணி கூட்டமும் முக்கியம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வெள்ளப் பாதிப்பு
தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத பேரழிவால் மக்கள் இன்றளவும் மீள முடியாத நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து தமிழக அரசு மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளது. மேலும், நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது தமிழக முதல்வர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்தியா கூட்டணி
இதுகுறித்து பேசியுள்ள விசிக தலைவரும் எம்பி-யுமான தொல். திருமாவளவன், இது அற்பமான அரசியல். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. எதிர்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கிறது. அதை விவாதிக்கவே இந்தியா கூட்டணி கூடியது. 22-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கான முடிவுகளும் இதில் எடுக்கப்பட்டுள்ளது.
அப்படியிருக்கையில் முதல்வர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதை விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. தென் மாவட்ட மக்கள் மழையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைவிட நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
திருமா விளக்கம்
எதிர்க்கட்சி எம்பி-க்கள் கொத்துக்கொத்தாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுவும் ஒரு பேரிடர் தான். தென் மாவட்ட வெள்ளத்தை விட இதுதான் மிகவும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். ஏனென்றால், தென் மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தியாவுக்கே ஒரு பிரச்சினை எனும்போது அங்கு முதல்வர் இருந்தாக வேண்டும். தென் மாவட்டங்கள் பாதிக்கப்படும் போது முதல்வர் ஒன்றும் கிரிக்கெட் மேட்ச் பார்க்கச் செல்லவில்லை. சுற்றுலா செல்லவில்லை. அவர் இந்தியாவின் பிரச்சினைக்காக இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார் எனத் தெரிவித்துள்ளார்.