விஜய் கட்சி அலுவலகத்தை அதிகாரிகள் இடித்ததால் பரபரப்பு - என்ன காரணம்?
தவெக கட்சி அலுவலகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்படும் விஜய் படப்பிடிப்பு முடிந்தவுடன், சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.
தற்போது கட்சி கட்டமைப்புகளை உருவாக்குவதில் விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக், தவெக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் பகுதியில் உள்ள தவெக கட்சி அலுவலகம் காவல்துறையினர் முன்னிலையில் இடித்துத்தள்ளப்பட்ட சம்பவம் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலுவலகம் அகற்றம்
திருவள்ளூர் பகுதியில் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கையால் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாகவே நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று(18.02.2025) மட்டும் நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 17க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை காவல்துறை பாதுகாப்புடன் ஜேசிபி வாகனங்கள் மூலம் இடித்து அகற்றினர். இதில் பத்தியால்பேட்டை பகுதியில் தவெக திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கட்டப்பட்ட மாவட்ட அலுவலகமும் இடிக்கப்பட்டது.
இந்த கட்டடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதால், இதனை அகற்றப்பட இருப்பதாக அதிகாரிகள் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அதனடிப்படையிலேயே இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கட்டடத்தை இடிக்கும் போது அங்கு தவெகவினர் குவிந்திருந்ததால் சிறுது பரபரப்பு நிலவியது.