கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூல் - கைது செய்யப்பட 2 ரவுடிகள் கீழே விழுந்ததில் கால்கள் முறிவு!
பேக்கரி கடை ஒன்றில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாமூல் வசூல்
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியிலுள்ள பேக்கரி கடை ஒன்றுக்கு வந்த 3 ரவுடிகள் ரூ.1000 மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடையில் உரிமையாளரின் மனைவி மட்டுமே இருந்துள்ளார்.
அந்த பெண்ணிடம் இந்த 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000த்தை வாங்கியுள்ளனர். கடையிலிருந்த பொருட்களையும் கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர். இது குறித்து போலீசில் புகார் அளித்தால் குடும்பத்தோடு வெட்டி கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். மேலும், இச்சம்பவத்தின் போது அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2 பேர் கைது
இதனையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பேக்கரியில் சென்று மிரட்டிய இளைஞர்கள் திருவள்ளூரைச் சேர்ந்த முகேந்தர் அமர்நாத், வினோத்குமார் என்கிற பாபா, பிரவீன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் கைது செய்யப்பட இருவரும் கீழே விழுந்ததில் அவர்களது கால்கள் முறிந்துள்ளது. உடனே அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகேந்தர் என்பவர் தலைமறைவாக இருப்பதால், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.