தன்னை பிரதமராக நினைத்துக்கொண்டு பேசுகிறார் நிர்மலா சீதாராமன் - திருமாவளவன்..!
தமிழக வெள்ளப்பாதிப்புகளை குறித்து பேசிய நிர்மலா சீதாராமனின் கருத்துக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியாரின் 50 -வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவ சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியது வருமாறு,
ஒட்டுமொத்த விளிம்பு நிலை மக்களுக்கும் பெரியார் உரிமையானவர் என்பதை உணராத சனாதன சக்திகள் தொடர்ந்து தமது காழ்ப்புணர்வை கக்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களை வீழ்த்துகின்ற முயற்சியில் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரண்டு இருக்கிறோம்.
அதன் காரணமாக தான், அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்கிற பெயரில் சமூக நீதிக்கான போராளிகள் ஒன்றிணைந்திருக்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டியடிப்போம். பாஜக ஆட்சி பொறுப்பிறகு வந்த பிறகு எதிர்க்கட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எதேச்சதிகாரமான போக்கில் செயல்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தையும் பாஜகவினர் மதிப்பதில்லை.
பிரதமராக நினைத்துக் கொண்டு
விரும்பியதைப் போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு கடைசி கூட்டத்தொடரில் முக்கியமான மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பது ஜனநாயகத்திற்கும் அரசமைப்பு சட்டத்திற்கும் விரோதமானது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் பாஜகவினருக்கு புகட்டுவார்கள்.
தேர்தலில் இ.வி.எம் இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 29 -ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். பாஜகவினர் ஊழல் குறித்து பேசுவதற்கு அருகதையற்றவர்கள். இதுவரை இல்லாத அளவிற்கான ஊழல் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிவாரண நிதியை தான் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறார்கள். ஆனால், பாதிப்புகளுக்கு ஏற்ப கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. ஆனால், அதனை இந்திய மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை. கிட்டத்தட்ட ரூ.21,000 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், அதில் ஒரு பைசா கூட மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை.
குறிப்பாக, அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தன்னை பிரதமராக நினைத்துக் கொண்டு பேசுவதை போல பேச்சை தனது தொனியில் வெளிப்படுத்துகிறார். இது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இது போன்ற பேச்சுக்களின் மூலம் அவர் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளார்"
இவ்வாறு அவர் கூறினார்.