SC, ST பிரிவு உள் இட ஒதுக்கீடு : நீதித்துறையில் சமூக நீதி இல்லை - திருமா உருக்கம்!
உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உள் ஒதுக்கீடு
எஸ்சி பட்டியலில் உள்ள சாதிகளைப் பிரித்து உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசு அருந்ததியர் சமூகப் பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க இயற்றியுள்ள சட்டமும் செல்லுபடி ஆகும் என்றும் அது தெரிவித்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அன்றைய முதலமைச்சர் திரு. கலைஞர் அவர்கள் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதனை வரவேற்று ஆதரித்துக் கருத்துகளைத் தெரிவித்தது.
தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டமும், அது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுத்த நிலைப்பாடும் மிகச் சரியானவை என்பதை இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்புப் புலப்படுத்தி உள்ளது. இந்தத் தீர்ப்பை அளிக்கும் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்றம்
அதுவும் வரவேற்கத்தக்கதேயாகும். ஏழு நீதிபதிகள் கொண்ட இந்த பேரமர்வில் சில நீதிபதிகள் எஸ்சி பிரிவினருக்கும் "கிரீமி லேயர்" என்னும் வருமான வரம்பை அளவுகோலாகக் கொள்ளும் ஒரு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், முதல் தலைமுறையில் இட ஒதுக்கீடு பெற்று முன்னேறிவிட்டால் அவர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
எஸ்சி பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு மாநில அரசுகளாலும், ஒன்றிய அரசாலும் எந்தத் துறையிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது இல்லை. அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பல்லாயிரக்கணக்கான பணியிடங்களைக் காலியாக வைத்திருந்து அவற்றை மற்றவர்களைக் கொண்டு நிரப்பும் தந்திரத்தை மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் நெடுங்காலமாகப் பின்பற்றி வருகின்றன.
இதனால் இலட்சக்கணக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காகப் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. இட ஒதுக்கீடே நிறைவு செய்யப்படாத நிலையில் கிரீமி லேயர் முறையைப் புகுத்தி இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்களை நீக்க முயற்சிப்பது எந்த விதத்திலும் நீதி ஆகாது.
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு:
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 2, 2024
---------------------------
உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!
கிரீமிலேயர் முறையைப் பற்றிக் கூறியுள்ள கருத்தைப் புறந்தள்ள வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!… pic.twitter.com/V90pP9sR83
கிரீமி லேயர்
எஸ்சி மக்களின் பணி நியமனம், பதவி உயர்வு முதலான விஷயங்களில் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் எதிரான தீர்ப்புகளையே வழங்கி வருகிறது. நீதித்துறையில் சமூக நீதி இல்லை என்பதன் விளைவே இது. இந்தத் தீர்ப்பில் கிரீமி லேயர் தொடர்பான கருத்துக்கள் ஆணையாகப் பிறப்பிக்கப்படவில்லை.
எனவே, அவற்றை நீதிபதிகளின் கருத்துகளாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தீர்ப்பின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறோம்.
உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்ற இந்தத் தீர்ப்பை சில மாநில அரசுகள் தமது அரசியல் இலாபத்துக்காகப் பட்டியலின மக்களின் ஒற்றுமைக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடும். அது குறித்த விழிப்புணர்வோடு இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.