SC, ST பிரிவு உள் இட ஒதுக்கீடு - அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
பட்டியலின பிரிவில் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள் இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியது உட்பட பல்வேறு மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதுக்கு எதிராக 20 வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, பட்டியலின பிரிவில் இருந்த 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியர் பிரிவினருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியது. இந்த உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
மாறுபட்ட தீர்ப்பு
இதே போல் பஞ்சாப், ஹரியானா உட்பட பல மாநிலங்களிலும் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுக்கு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் 2020 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என தீர்ப்பு அளித்தது. ஏற்கனவே உள் இடஒதுக்கீடு அனுமதிக்க கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் 6 நீதிபதிகள் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பில் நீதிபதி பெலா திரிவேதி மட்டும் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் சாசனத்தின் 14 ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. அதன் பிறகு பட்டியலின உள்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை. இதன் காரணமாக உள் ஒதுக்கீடு வழங்குவதில் எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்தனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான #SocialJustice-ஐ நிலைநாட்டும் நமது #DravidianModel பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது!
— M.K.Stalin (@mkstalin) August 1, 2024
முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான… pic.twitter.com/GYtyrOX4dn
இந்த தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.