விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் - முதல்வரை சந்திக்கும் திருமாவளவன்

M K Stalin Thol. Thirumavalavan DMK
By Karthikraja Dec 09, 2024 07:17 AM GMT
Report

 விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா

விசிக கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக கடந்த ஆண்டு ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே திமுக குறித்து விமர்சித்து வந்தார். 

aadhav arjuna

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் திமுக குறித்து ஆதவ் அர்ஜுனா விமர்சித்தது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

4 எம்எல்ஏ போதாது,10 சீட் வேண்டுமென்கிறார்கள்‌; மாற்றம் வந்துவிடுமா? - திருமாவளவன்

4 எம்எல்ஏ போதாது,10 சீட் வேண்டுமென்கிறார்கள்‌; மாற்றம் வந்துவிடுமா? - திருமாவளவன்

திமுக மீது விமர்சனம்

ஆதவ் அர்ஜுனா மீது விசிக தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராஜா வலியுறுத்தினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி, அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீடு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் மன்னராட்சி நடக்கிறது என்பது சினிமா துறையை ஒரு குடும்பம் மறைமுகமாக கட்டுப்படுத்துகிறது என கடுமையாக விமர்சித்து வந்தார். 

aadhav arjuna thirumavalavan

இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் விசிகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகளே ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆதவ் அர்ஜுனா கருத்து குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருந்தார்.

இடை நீக்கம்

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவை 6 மாதம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.

இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும், அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. 

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்" என தெரிவித்துள்ளார்.

முதல்வருடன் சந்திப்பு

இந்நிலையில் இன்று(09.12.2024) சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தலைமை செயலகத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்துள்ளார்.

பெஞ்சல் புயல் பாதிப்புக்கு விசிக சார்பில் நிவாரண நிதி அளிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்தும் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.