4 எம்எல்ஏ போதாது,10 சீட் வேண்டுமென்கிறார்கள்; மாற்றம் வந்துவிடுமா? - திருமாவளவன்
அம்பேத்கரை - திருமாவளவன் தேர்தல் வெற்றி, கூட்டணி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் என்றாலும் அதில் தெளிவாக இருக்க வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார்.
அம்பேத்கர் புத்தக வெளியீடு
அம்பேத்கரின் பேரனான முனைவர் ஆனந்த் டெல்டும்டே எழுதிய டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான Iconoclast என்ற புத்தக வெளியீடு நேற்று(07.12.2024) நடைபெற்றது.
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் நடந்த இந்த நிகழ்விற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார்.
அம்பேத்கர் குறித்த தெளிவு
இந்த நிகழ்வில் பேசிய அவர், "Iconoclast என்றால் பிம்ப சிதைப்பாளர் என்று பொருள். அம்பேத்கர் ஏற்கெனவே இந்தச் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களை உடைத்தவர். அப்படி உடைத்ததால்தான் புதிய கட்டுமானத்தை உருவாக்க முடியும் என்றவர் அம்பேத்கர்.
எல்லோரும் அம்பேத்கருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதன் மூலம் அவரை இந்து தலைவராக அடையாளப்படுத்தி விழுங்க பார்க்கின்றனர். இதைத் தடுப்பது நம் முன் உள்ளே சவால். அதே போல அம்பேத்கரை எங்கள் சமூகத்தவர் என்று கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல் அவருடைய பங்களிப்பை அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதே ஆனந்த் டெல்டும்டேவின் கருத்து.
நமக்கு அம்பேத்கர் யார் என்ற தெளிவு இருக்கிறது. தற்காலிக வளர்ச்சி, அதிகாரம், வெற்றிக்காக நாம் அம்பேத்கரின் பாதையை விட்டு நழுவி விட முடியாது. 4 எம்.எல்.ஏ போதாது, 10 சீட் வேண்டும் என்கின்றார்கள். நான்கு பத்தானால் மாற்றம் நிகழ்ந்துவிடுமா?
கூட்டணி இரண்டாம் பட்சம்
தேர்தல் வெற்றி, கூட்டணி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்றாலும் அதில் தெளிவாக இருக்க வேண்டும். இதற்கான மோதலே இப்போது நடைபெற்று வருகிறது. அவர்கள் விரும்புவதை நாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்புகளுக்கு எதிர்வினையாற்றவா கட்சி நடத்துகிறோம்.
திருமாவளவன் தடுமாறுகிறார், பின்வாங்குகிறார் என்று சொல்கிறார்கள். அவர்களுக்காக இதைச் சொல்லவில்லை, அவர்களால் உங்களுக்குள் எந்த தடுமாற்றமும் வந்துவிடக்கூடாது எனச் சொல்லுகிறேன். நம்மை சமூக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ கூட குறைத்து மதிப்பிடலாம்.
ஆனால் ஒருபோதும் நாம் சுயமரியாதையையோ, தன்மானத்தையோ, கருத்தியல் நிலைப்பாட்டில் கொண்டுள்ள உறுதிப்பாட்டையோ யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதை மதிப்பீடு செய்யக்கூடிய அளவுக்குத் தகுதி பெற்றவர்கள் தமிழகத்தில் இல்லை" என பேசினார்.