திமுகவை மட்டும் நம்பி விசிக இல்லை; எந்த முடிவையும் எடுக்க முடியும் - திருமாவளவன் பேச்சால் பரபரப்பு
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளது.
திமுகவை வீழ்த்தும் நோக்கில், அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதனையடுத்து, அதிமுக கூட்டணியில் இருந்த SDPI கட்சி, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
திருமாவளவன்
கடந்த தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தற்போது வரை அதே கூட்டணியில் தொடர்கின்றன.
இந்நிலையில், திமுகவை மட்டும் நம்பி விசிக இல்லை, தேர்தல் அரசியலில் விசிகவால் எந்த முடிவையும் எடுக்க முடியும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் நேரலையில் பேசிய அவர், 24 மணி நேரமும் தொண்டர்களுடன் இருக்கவே ஆசைப்படுகிறேன். ஆனால் முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வுக் கூட்டப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. ஒருநாள் கூட எனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என்கிற நிலை நீடிக்கிறது.
திமுகவை நம்பி இல்லை
தமிழ்நாட்டு அளவில் பாஜக வலிமை பெறக்கூடாது என்று கருதுகிறோம். ஆனால் அவர்கள் ஆக்டோபஸ் கரங்களால் நாடு முழுவதும் பற்றிக் கொண்டு இருக்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.
திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோம் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் ஒரு தெளிவை பெற வேண்டும்.
தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை.
ஒரே துருப்புச்சீட்டு விசிக
எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது. கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக் கொள்வது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதில் ஈடுபாடு காட்டவில்லை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு துணிவும், தெளிவும், தொலைநோக்கு பார்வையும் வேண்டும். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான்.
ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.