திமுக கூட்டணியில் இணைகிறதா பாமக? முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
திமுக கூட்டணியில் பாமக இணைவதாக வெளியான தகவலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் பாமக?
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.
சமீபத்தில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுகவுடனான பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இதனையடுத்து, அதிமுக கூட்டணியில் இருந்த SDPI கட்சி, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
அதேவேளையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக திமுக கூட்டணிக்கு செல்ல உள்ளதாகவும், திமுக கூட்டணியில் உள்ள விசிக கூட்டணியை விட்டு வெளியேறுவதாகவும் தகவல் வெளியானது.
முதல்வர் ஸ்டாலின் பதில்
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய போது, "திமுக கூட்டணியில் பாமக இணைகிறது என்ற தகவலில் உண்மை இல்லை. திமுக கூட்டணி உறுதியாக உள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கிறேன். அதிமுக பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன். தற்போது அது உண்மையாகியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணியை ஏற்கனவே 2 முறை தோற்கடித்துள்ளோம். 2026 தேர்தலிலும் நிச்சயம் தோற்கடிப்போம்" என கூறினார்.