அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிவு.. இது தன்மானத்தை காக்க எடுத்த முடிவு - திருமாவளவன் கருத்து!
கூட்டணி முறிவு குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சி
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. கட்சி முடிவையே நான் சொல்கிறேன். தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. கூட்டணி தர்மம் குறித்து பேசுவதை அதிமுக தொண்டர்கள் சகித்து கொள்ளமாட்டார்கள். பல முறை எச்சரித்தும் அலட்சியப்படுத்துகிறார் அண்ணாமலை.
அண்ணாமலைக்கு தகுதிக்கு மீறிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தன்னை முன்னிலைப்படுத்தவே தொடர்ந்து தலைவர்களை அவமதிக்கிறார். பாஜக கூடுதல் சுமை மட்டுமல்ல; தேவையற்ற சுமை.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? சிங்க கூட்டமான அதிமுகவை பார்த்து சிறு நரியான அண்ணாமலை ஊளையிடுவதா?அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிமுகவுக்குள் ஒரு குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த கூட்டணி பிரிந்தது குறித்து பேசியுள்ளார். அதில், " அதிமுக கட்சி சார்பாக ஜெயக்குமார் இன்று கூட்டணி கிடையாது என்று அறிவித்தது வரவேற்கத்தக்கது. அறிஞர். அண்ணா அவர்களை கொச்சைப்படுத்தி அண்ணாதுரை என்று பெயரை சொல்லி அழைத்தது மிகுந்த அவமதிப்பதாகும். இதனால் அதிமுக தற்போது தன்மானத்தோடு முடிவு எடுத்துள்ளது என்று கருதுகிறேன்.
இது அதிகாரபூர்வமான அறிவிப்பாக இருந்தால் பொதுமக்கள் இடையே வரவேற்பு இருக்கும். அல்லது பாஜகவின் வரவேற்பை ஈர்ப்பதற்காக கூறியிருந்தால் திரும்ப கூட்டணி தொடர வாய்ப்புள்ளது.
எனவே இது பாஜகவின் கவனத்தை ஈர்ப்பதற்காக சொல்லப்பட்டதா? இல்லை அதிமுக தன்மானத்தை தக்கவைக்க சொல்லப்பட்டதா? என்பதை பொறுத்திருந்து பார்போம்" என்று கூறியுள்ளார்.