பொன்முடி வழக்கு - நேர்மையா விசாரிச்ச மாதிரி தெரியல..! திருமாவளவன்
இன்று சென்னையில் நாடாளுமன்றத்தில் எம்.பி'க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 141 எம்.பி'க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றன. டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி'க்கள் இது குறித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
இதனை தொடர்ந்து, இன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பொன்முடி வழக்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்து பேசிய அவர், நீதிபதியையும் நீதியையும் விமர்சிக்க கூடாது என்று கூறி, ஆனால் அயோத்தி - ஜம்மு காஷ்மீர் வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு பெரும் விமர்சனத்திற்குள்ளானது என்று கூறினார்.
நேர்மையாக நடத்தப்படவில்லை
அப்படித்தான் பொன்முடி வழக்கையும் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது என்ற திருமாவளவன், ஏனெனில், இந்த வழக்கு விழுப்புரம் செஷன்ஸ் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்று சுட்டிக்காட்டி, இது மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு அல்ல என்றும் நீதிபதியால் எடுத்துக் கொண்டு விசாரித்த வழக்கு என்றார்.
நீதிபதி ஜெயச்சந்திரன் ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என்ற தகவலை தெரிவித்த் திருமா, பொன்முடி மீது இந்த வழக்கு புனையப்படுவதற்கு அவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்று விமர்சித்தார்.
பொன்முடி தொடர்பான ஆவணங்களை சேகரித்ததில் நீதிபதி ஜெயச்சந்திரனின் பங்கும் இருந்திருக்கிறது என்றும் இவை அனைத்தும் நீதிமன்றத்திலும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது எனக்கூறி, அப்போதும் கூட நீதிபதி, இதனை நீங்கள் முன்கூட்டியே சுட்டிக்காட்டி இருந்தால் நான் இந்த வழக்கில் இருந்து விலகி இருக்க மாட்டேன் என்றும் சொல்லி இருக்கிறார் போன்ற தகவல்களை தெரிவித்தார்.
ஆகவே, நீதிபதிக்கு இந்த வழக்கில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறி, இந்த வழக்கு நேர்மையாக விசாரிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை என்றும் திருமாவளவன் கூறினார்.