சாதிய மத உணர்வில் திளைத்து கிடக்கிறார்கள் பாமக - பாஜக கூட்டணி - திருமாவளவன் விமர்சனம்
OBC, MBC மக்களை பாமக கைவிட்டாலும், விசிக அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமா செய்தியாளர்கள் சந்திப்பு
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் 2 மக்களவை வேட்பாளர்களை கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்தார்.
சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய அவர், மக்களின் ஆதரவில் தாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், பாமக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு,
பாஜக பூஜ்ஜியம்..
சாதிய மத உணர்வில் பாஜகவும், பாமகவும் திளைத்துக் கிடக்கிறார்கள். அவர்கள் கூட்டணி அவர்கள் விருப்பமாக உள்ளது என்றார். மேலும், பாமக ஒன்று - பாஜக பூஜ்ஜியம் இரண்டும் சேர்ந்தாலும் மதிப்பு ஒன்று மட்டுமே என்ற திருமாவளவன்,
திமுக அதிமுக எதிரெதிர் அணியாக இருந்தாலும் சமூகநீதி என்று வந்துவிட்டால் அவர்கள் ஒருங்கிணைந்த சிந்தனை உடையவர்கள் என்றும் ஆனால் பாஜக அப்படி அல்ல என குறிப்பிட்டார்,
தொடர்ந்து பேசிய அவர், BC, MBC மக்களை பாமக கைவிட்டாலும், விசிக அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என உறுதிபட தெரிவித்தார்.