யார் அந்த சார்? வலுவான சந்தேகம் உள்ளது - திருமாவளவன்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நேர்மையான விசாரணை தேவை என திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளது.
வலுவான சந்தேகம்
அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த குற்றச் செயல் பெரிதும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
எனவே பள்ளி, கல்லூரிகள், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரையில் கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி வேறு சிலர் அதில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.
காவல்துறை, நேர்மையான முறையிலே புலன் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்கக்கூடாது. அவரை சிறையில் வைத்த படியே புலன் விசாரணையை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை முடித்து தண்டனையை வழங்க வேண்டும் என கூறினார்.
யார் அந்த சார்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது, இதுபோன்ற சந்தேகம் இருப்பதால் தான் நேர்மையான விசாரணை தேவை என கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
போராட்ட அனுமதி
எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, "கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்துவதற்கான அனுமதி பல்வேறு இயக்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. போராட்டங்களும் நடந்திருக்கின்றன.
இதை வைத்து சிலர் அரசியல் செய்ய வேண்டும் என செயல்படுவதால், அரசு அனுமதி மறுத்து வருவதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு போராட அனுமதி வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை" என தெரிவித்தார்.
இந்த வழக்கில் சார் என யாருமில்லை ஞானசேகரன் என்பவர் மட்டுமே குற்றவாளி என காவல்துறையும், திமுக அரசு கூறி வருகிறது. இதை ஏற்க மறுத்து அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், திமுகவின் கூட்டணியில் உள்ள விசிகவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.