ஆதவ் அர்ஜுனா பேச்சால் திமுக கூட்டணியில் விரிசலா? திருமாவளவன் பதில்
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் பேசியுள்ளார்.
விசிக திமுக
கடந்த சில வாரங்களாகவே திமுகவிற்கும் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு, ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விசிகவின் செயல்பாடுகள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆதவ் அர்ஜுனா
இந்நிலையில் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அளித்த நேர்காணலில் மகளிர் உரிமை தொகை மதுக்கடைகளுக்கே செல்கிறது. விசிக இல்லாமல் திமுக வட மாவட்டங்களில் ஜெயிக்க முடியாது, என வெளிப்படையாகவே திமுகவை தாக்கி பேசினார்.
முக்கியமாக, "சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா என உதயநிதி ஸ்டாலினை தாக்கி பேசியது திமுகவினருக்கு கோவத்தை ஏற்படுத்தியது.
திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு கூட்டணி அறனுக்கு, அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. திருமாவளவனின் ஒப்புதலோடு இதனைப் பேசியிருக்க மாட்டார். இது போன்ற பாஜகவிற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக் கூடியவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராஜா பேசியிருந்தார்.
இந்நிலையில் விசிக தலைவர் திருமவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆதவ் அர்ஜுனா கருத்து குறித்த கேள்விக்கு, திமுக விசிக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. விரிசல் எழுவதற்கும் வாய்ப்பு இல்லை. நான் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என பேசிய வீடியோ பல விவாதங்களுக்கு இட்டு சென்று விட்டது என பதிலளித்தார்.
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, இது குறித்து கட்சியின் உயர் நிலை குழுவிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.