கவிஞரின் வீட்டில் திருட்டு - உண்மை தெரிந்ததும் மனமுடைந்து திருடன் செய்த செயல்!
திருடியது எழுத்தாளர் வீடு என்று தெரிந்ததும் திருடன் பொருட்களை திரும்ப கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.
பிரபல கவிஞர்
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்திலுள்ள நேரல் பகுதியில் சில நாட்களாக ஒரு வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதனை நோட்டமிட்ட திருட்டு ஆசாமி ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து எல்.இ.டி. டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றார்.
அதே வீட்டில் மிச்சம் மீதி இருப்பதை மீண்டும் மறுநாள் திருட வந்தார். அப்போது அங்கு பிரபல மராத்தி எழுத்தாளரும், கவிஞருமான நாராயண் சுர்வேவின் புகைப்படம் இருந்தது. இதைப் பார்த்தபோது தான் அது பிரபல கவிஞரின் வீடு என்பது திருடனுக்கு தெரியவந்தது.
இவர், மும்பை தெருக்களில் ஆதரவற்ற சிறுவனாக வாழ்ந்து வீட்டுவேலை, ஹோட்டல் வேலை, நாய் பராமரிப்பாளர், சுமை தூக்குபவர் என பல்வேறு வேலைகளை செய்து, பின்னாட்களில் பிரபல எழுத்தாளர் மற்றும் கவிஞராக மாறியவர் ஆவார்.
மன்னிப்பு கடிதம்
நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் காலமானார். இவரை பற்றி திருடனுக்கு நன்றாக தெரிந்திருந்ததால், பிரபல கவிஞரின் வீட்டில் திருடி விட்டோமே என்று மனவேதனை அடைந்துள்ளார்.
இதனால் திருடிய பொருட்களை மீண்டும் வீட்டில் கொண்டு வந்து வைத்து, ஒரு துண்டு சீட்டில் மன்னிப்பு கடிதமும் எழுதி வைத்துள்ளார். அதில், "மிக உயர்ந்த எழுத்தாளர், கவிஞர் வீட்டில் திருடியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்'' என குறிப்பிட்டிருந்தார். நாராயண் சுர்வேவின் வீட்டில் தற்போது அவரது மகள் சுஜாதா, கணவர் கணேஷ் காரேவுடன் வசித்து வருகிறார். இவர்கள் கடந்த 10 நாட்களாக விராரில் உள்ள தங்களது மகன் வீட்டுக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் வீடு திரும்பிய அவர்கள் அங்கிருந்த திருடனின் கடிதத்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்தனர். ஆனால், திருட்டு செயலை ஏற்றுக்கொள்ள முடியாததால், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் தற்போதோ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
