நடமாடும் நவீன கேமரா - திருடுபோன வாகனங்களை இனி ஈஸியா கண்டுபிடிக்கலாம்!
வாகன திருட்டுகளை தடுக்கும் வகையில் நடமாடும் நவீன கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
வாகன திருட்டு
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவது போல் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்கள் காணாமல் போகும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
காவல் துறையினர் எவ்வளவுதான் கண்காணிப்பை பலப்படுத்தினாலும் இருசக்கர வாகன திருட்டு தினமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திருட்டுகளை தடுக்கும் வகையில், நடமாடும் நவீன கண்காணிப்பு கேமராக்களை சென்னை போலீஸார் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த கேமராக்களை இரவு வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸார் சாலை சந்திப்புகளில் வைக்கின்றனர்.
தப்ப முடியாது
இது சாலையில் வரும் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை துல்லியமாக படம் பிடிக்கும். அதேபோல், ஏற்கனவே திருடி போன வாகனங்களின் எங்களை இந்த கேமராவில் பதிவேற்றம் செய்து வைக்கப்பட்டிருக்கும்.
அந்த வாகனங்கள் சாலை வழியாக வந்தால், அதை துல்லியமாக படம் பிடித்து போலீசாருக்கு எச்சரிக்கை செய்யும். இதையும் தாண்டி இருசக்கர வாகனம் சென்றால், சம்பந்தப்பட்ட காவல் மாவட்ட ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் இருசக்கர வாகன திருடர்கள் இனி சென்னை போலீஸாரிடம் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.