சிறுவன் செய்த காரியம்; திருட வந்த வீட்டில் தற்கொலை செய்த திருடன் - என்ன நடந்தது..?
திருடன் ஒருவன் திருடச் சென்ற வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் ஜீவா தெருவை சேர்ந்தவர் லட்சுமி (45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வாழ்ந்து வருகிறார்.
லட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுவன், பிற்பகல் 2 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு விளையாட சென்றிருக்கிறார். பின்னர் 4 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் பூட்டு மாயமாகி, உள்ளே அறைக் கதவும் திறந்து கிடந்தது.
இதனையடுத்து அந்த சிறுவன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உள்ளே மர்ம நபர் ஒருவர் இருந்துள்ளார். உடனடியாக வெளியே வந்த சிறுவன், வீட்டை பூட்டிவிட்டு தனது தாயாருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
தற்கொலை
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை திறந்து பார்த்த போது, அந்த மர்ம நபர் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தது.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டிற்குள் தற்கொலை செய்துகொண்ட நபர் கடாம்பூர் பகுதியைச் சேர்ந்த பூபதி (45) என்பதும் அவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், போலீசாரிடம் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் அவர் வீட்டிலிருந்த புடவையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.