ரூ3000 திருட்டு - 18 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்தவர் கைது
3000 ரூபாய் திருடி விட்டு 18 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே வடுகச்சிமாத்தில் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பி.ராமையா. இவர் கடந்த 2006 ம் ஆண்டு, தோனாவூரிலுள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கள்ளச்சாவியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து, அங்கிருந்து ரூ. 2,959 பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி, ராமையாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து, சில வாரங்களில் ஜாமீனில் வெளிய வந்த ராமையா, அப்பகுதியிலிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை
சமீபத்தில் திருவண்ணாமலைக்கு சென்றிருந்த ராமையாவின் உறவினர்கள் சிலர் அங்கே சாமியார் வேடத்தில் ராமையாவை பார்த்ததாக உள்ளூரில் தகவல் தெரிவித்துள்ளனர். இதையறிந்த காவல்துறையினர், 16 வருடங்களுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கை தூசித்தட்டியுள்ளனர்.
உடனடியாக திருவண்ணாமலை சென்ற நான்குநேரி மண்டல காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வி. பிரசன்ன குமார் தலைமையிலான காவல்துறையினர், அங்கே மாறுவேடமணிந்தும், பிளாட்பாரங்களில் படுத்து தூங்கியும் ராமையாவின் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளனர்.
கைது
காவி உடையில் மௌன சாமியாராக ஆசி வழங்கிக் கொண்டிருந்த ராமையாவை கையும் களவுமாகப் பிடித்த காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணைக்காக நான்குநேரிக்கு அழைத்து வந்துள்ளனர்.
18 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவான ராமையா, தன்னை சாமியாராக பாவித்துக்கொண்டு பல பகுதிகளுக்கு வலம் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஏர்வாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.