போலீஸ், தொழிலதிபர் என 50 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி - அதிர்ந்த போலீஸ்
50க்கு மேற்பட்டோரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த இளைஞர் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 35 வயது ஆகியும் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் இவரது உறவினர்கள் தீவிரமாக பெண் தேடி வந்தனர்..
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், ஈரோட்டை சேர்ந்த சந்தியா(30) என்ற பெண் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமானார். இருவருக்கும் பிடித்து போக பழனி அருகே உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமண கோலத்தில் வீட்டிற்கு சென்ற இவர்களை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தாலும், பெண் கிடைத்த மகிழ்ச்சியில் ஏற்றுக்கொண்டு புடவை, நகை எல்லாம் வாங்கி கொடுத்து நல்லபடியாக பார்த்துக்கொண்டுள்ளனர்.
விசாரணை
இருந்தாலும் அவர் தோற்றத்திற்கும் அவர் சொன்ன வயதுக்கு அதிக வித்தியாசம் இருப்பதால் சந்தேகமடைந்த இளைஞரின் பெற்றோர் சந்தியாவின் ஆதார் அட்டையை பார்த்துள்ளனர். அதில் அவருக்கு வயது வித்தியாசமாக இருப்பதாகவும், கணவர் என்ற இடத்தில் சென்னையை சேர்ந்த ஒருவரின் பெயர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 10 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு திருமணம் ஆகி விட்டதாகவும், ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது.
50 க்கு மேற்பட்ட திருமணம்
மேலும் டிஎஸ்பி, கரூரில் காவல் ஆய்வாளர், மதுரையில் மற்றொரு போலீஸ்காரர், கரூரில் ஒரு பைனான்ஸ் அதிபர் என சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. 35 வயதுக்கு மேல் திருமணம் ஆகாத நபர்கள், திருமணம் ஆனோர் ஆகியாரை குறிவைத்து பழகி ஏமாற்றியுள்ளார். திருமணம் ஆகி 3 மாதம் குடும்பம் நடத்தி விட்டு ஏதாவது தகராறு செய்து விட்டு நகை பணத்தை சுருட்டி கொண்டு சென்று விடுவாராம்.
இவரிடம் நகை பணத்தினை இழந்த பலர் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி புகார் அளிக்காமல் விட்டுவிட்டனர். இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து ஏமாற்றிய இந்த சம்பவம் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.