வகுப்பறையில் தாலி கட்டிய பள்ளி மாணவன்; வாட்சாப்பில் ஸ்டேட்டஸ் - அடுத்து நடந்தது என்ன?
பள்ளி வளாகத்தில் மாணவன் மனைவிக்கு தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவி உடன் படிக்கும் சக மாணவனுடன் காதலில் இருந்து வருகிறார். இந்நிலையில், பள்ளி வகுப்பறையில் வைத்தே அந்த மாணவன் காதலித்த சக மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். மேலும், தாலி கட்டியதை வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் வைத்து மாணவனும், மாணவியும் பேசி கொண்டிருந்துள்ளனர். தாலி கட்டிய விசயம் அறிந்த பெண்ணின் உறவினர்கள் சிறுவனிடம் இது குறித்து கேட்டபோது இருதரப்பினர் இடைய மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அன்று இரவே சிறுமி, அந்த சிறுவனுடன் மாயமாகியுள்ளார்.
கைது
இது தொடர்பாக, சிறுமியின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தோகைமலை காவல் நிலைய போலீஸார் மாயமாகிய அந்த மாணவர், மாணவி ஆகிய இருவரையும் கண்டுபிடித்தனர். மேலும், அந்த சிறுவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த சிறுமியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி வளாகத்தில் நடந்துள்ளது. ஆசிரியர்கள் இதெல்லாம் கண்காணிக்க மாட்டார்களா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின் தாலி கட்டிய மாணவருக்கு உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி வளாகத்தில் வைத்து சக மாணவிக்கு, மாணவர் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.