ஓபிஎஸ்க்கு தொடர்ந்து அடி; தேவர் தங்க கவசம் - நீதிமன்றம் எடுத்த முடிவு!
தேவர் தங்க கவசத்தை, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவர் தங்க கவசம்
ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. அங்குள்ள தேவரின் சிலைக்கு 2014 இல் அதிமுக சார்பில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை ஜெயலலிதா வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜெயந்தி விழாவின்போது தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணவிக்கப்படும்.
இந்த தங்கக் கவசத்தை கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு வாங்கி, நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.
நீதிமன்ற உத்தரவு
தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி, பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளனர். இந்நிலையில், தங்க கவசத்துக்கு உரிமை கோரி திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அப்போது ஓபிஎஸ் தரப்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் தான் உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இதுபற்றிய விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே தேவர் கவசத்தை வேறு யாரிடமும் வழங்க கூடாது, என வாதிடப்பட்டது.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தேவர் தங்க கவசம் இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் எடுக்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்தக் கவசம் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.