பழனிச்சாமியின் வயிற்றெரிச்சலுக்கு மருந்து கிடையாது- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
பழனிச்சாமியின் வயிற்றெரிச்சலுக்கு மருந்து கிடையாது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
வெளிநாடு பயணம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,2021-ல் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு இதுவரை ரூ.10,06,709 கோடி முதலீட்டுக்கான 891 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. அதாவது 60 விழுக்காடு அளவுக்கு இப்போதே எட்டியிருக்கிறோம்.
234 ஒப்பந்தங்கள் மூலம் உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டன. 301 ஒப்பந்தங்கள் மூலம் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இது திராவிட நாயகன் ஆட்சியின் வரலாற்று சாதனை. பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தும் செய்யாத இந்த சாதனையை மூன்றாண்டுகளிலேயே செய்து காட்டியிருக்கிறோம்.
இது இந்திய முதலீட்டு வரலாற்றிலேயே நடக்காத சாதனை! திமுக ஆட்சியில் நடந்த 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதில் 403 ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டு பலர் உற்பத்தியையும் மேலும் பலர் கட்டுமானப் பணிகளையும் தொடங்கிவிட்டனர்.
அதாவது போடப்பட்ட ஒப்பந்தங்களில். 64 விழுக்காடு அளவிற்கு நடைமுறைக்கு கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 40 விழுக்காடு அளவுக்கு நிறைவேற்றப்பட்டாலே பெரிய சாதனை என்று கருதப்படும் சூழலில்,
டி.ஆர்.பி.ராஜா
மாநாடு முடிந்து 9 மாதங்களுக்குள்ளாகவே நமது திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு 64 விழுக்காட்டை எட்டி இமாலய சாதனை படைத்துள்ளது. 2019-ல் வெளிநாடு போன அன்றைய முதல்வர் பழனிசாமி 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டார். 5,087 கோடி ரூபாய் முதலீடு வரும், 24,720 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்.
ஆனால், இன்று வரை வெறும் 434 கோடி ரூபாய்தான் வந்துள்ளது. அதாவது 10 விழுக்காடு கூட நிறைவேறவில்லை. வெறும் 8.53 விழுக்காடு மட்டுமே நிறைவேற்றினார்கள். ஐக்கிய அரபு நாட்டின் பெட்ரோ-கெமிக்கல் நிறுவனத்தோடு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் இன்று வரை ஒரு பைசா கூட வரவில்லை.
முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணி வகிக்கும் #தமிழ்நாடு !?
— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 23, 2024
இது மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் #திராவிட_நாயகன் அவர்களின் மகத்தான சாதனை !? pic.twitter.com/BXR9GjMHno
இதற்கெல்லாம் பழனிச்சாமி எப்போது வெள்ளை அறிக்கை வெளியிடுவார்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் புதிதாகத் தொழில் தொடங்க தகுதியுள்ள எவர் வந்தாலும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் தொழில்துறை சாதனைகளையும், ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகளையும் குறை சொல்ல, நிர்வாகத் திறனற்ற ஆட்சி நடத்திய பழனிச்சாமிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
விடியல் அரசின் சாதனைகளை நாடே போற்றுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியின் வயிற்றெரிச்சலுக்கு மருந்து கிடையாது.
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.