தக்காளியால் தங்க மகன் ஆன விவசாயி - ஒரே மாதத்தில் ரூ.1.5 கோடி வருமானம் ஈட்டி அசத்தல்..!
கடந்த ஒரே மாதத்தில் தக்காளி விற்பனை செய்ததன் மூலம் ரூ.1.5 கோடி வருமானம் ஈட்டி கோடீஸ்வரர் ஆகியுள்ளார் விவசாயி ஒருவர்.
12 ஏக்கரில் தக்காளி விவசாயம்
இந்தியாவில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
இதனால் சில விவசாயிகள் சில மாதங்களில் லட்சாதிபதியாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறி இருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் காய்கறி விளைச்சல் அதிகமாக இருக்கிறது.
புனேயில் விளையும் காய்கறிகள் அதிக அளவு மும்பைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. புனே அருகில் உள்ள ஜுன்னார் தாலுகாவில் உள்ள நாராயண்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர் துகாராம் காயகர்.
இவர் தனது மகன் ஈஸ்வர் மற்றும் மருமகள் சோனாலி ஆகியோர் சேர்ந்து தங்களது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டு வந்துள்ளனர். துகாராம் குடும்பத்திற்கு 18 ஏக்கர் நிலம் இருக்கிறது.
தக்காளியால் கோடீஸ்வரர் ஆன விவசாயி குடும்பம்
இதில் 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இதனால் தக்காளிக்கு தேவையான மகசூல் கிடைத்துள்ளது. ஒரு கிரேடு தக்காளி ரூ.900 வீதம் ஒரே நாளில் 18 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு கிரேடு ரூ.2100 வரை விற்பனையாகியுள்ளது. தக்காளி மகசூல் மூலம் துகாராம் ஒரே மாதத்தில் ரூ.1.5 கோடி வருமானம் ஈட்டி இருக்கிறார்.
புனே மாவட்டத்தில் உள்ள ஜுன்னார் தாலுகாவில் தக்காளி பயிரிட்ட பல விவசாயிகள் தற்போது லட்சாதிபதியாகி இருக்கின்றனர்.
துகாராம் அவரது மகன், மற்றும் மருமகளின் மூன்று மாத கடின உழைப்பால் ஒரே மாதத்தில் தக்காளி விற்பனை மூலம் ரூ.1.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.