‛தி கேரளா ஸ்டோரி’: பிரதமரே ஆதரிப்பது பெரும் வேதனை - கொந்தளித்த சீமான்!
சீமான், பாஜகவையும் பிரமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி
‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசானது. இதில், கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதனை ஹிந்தி திரைப்பட இயக்குனரான சுதிப்தோ சென் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பல தரப்பு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொதித்த சீமான்
இந்நிலையில் தான் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் தியேட்டர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று சென்னை உள்பட சில இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து சீமான் பேசுகையில், ‛‛கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான தி கேரளா ஸ்டோரி படத்தை பிரதமரே ஆதரிப்பது வேதனையாக உள்ளது.
பாஜக கருத்துகள் கொண்ட படங்கள் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொன்றாக வெளிவர தொடங்குகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைக்குரிய படங்கள் வெளியிடப்படுகின்றன. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை பாஜகவினர் உருவாக்க முயற்சிக்கின்றன.
மதம் இருந்தால் போதும் என பாஜக நினைக்கிறது. கர்நாடகா தேர்தலுக்காக ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் ரிலீசாகி உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக ‛திப்பு' என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது'' என கண்டனம் தெரிவித்தார்.