தனியார் வசமாகிறதா காலை உணவு திட்டம்..?
திமுக அரசால் துவங்கப்பட்ட காலை உணவு திட்டம் சென்னையில் தனியார் வசம் ஒப்படிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலை உணவு திட்டம்
தமிழக அரசு சார்பில் நாட்டின் முன்னோடி திட்டமான காலை உணவுத் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 1545 பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணப்பெற்றுள்ளனர். சென்னையை பொறுத்தவரை 358 பள்ளிகளில் காலை உணவு திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தனியார் வசமாகிறதா..?
இந்நிலையில் தான் இந்த திட்டத்தினை சென்னையில் தனியார் வசம் ஒப்படைக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
அதில் குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இத்தீர்மானத்திற்கான ஒப்புதல் 2 மணி அளவில் பெறப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மகளிர் சுய உதவி குழுக்களால் அம்மா உணவகங்களில் தயாரிக்கப்படும் இக்காலை உணவு உணவுகளானது தனியார் வசம் செல்லும் நிலையில், இதற்காக 12 விதிகளை தனியார் ஒப்பந்ததாரர் பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.