இனி அதுக்கு வாய்ப்பில்லை ராஜா...ரயிலில் டிடிஆர் உடலில் வருகிறது கேமரா..!
ஓடும் ரயிலில் பணியில் ஈடுபடும் டிடிஆர்களின் உடலில் கேமரா பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரயில்வே
சமீபத்தில் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் (டிடிஆர்) இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அதே போன்று ரயிலில் பயணம் செய்யக் கூடிய ஒரு சில பயணிகள் அராஜமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்தது.
இதுபோன்ற புகார்கள் வரும்போது அவைகுறித்த உண்மைத்தன்மை அறிவதற்காக டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெயர் கெட்டுப்போவது தவிர்க்கப்படும்
மத்திய ரயில்வேயில் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 50 பாடி கேமராக்கள் வாங்கி மும்பை கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு கேமராவின் விலை ரூ.9 ஆயிரம் அதில் 20 மணி நேரத்துக்கு நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும்.
இத்திட்டத்தின் மூலம் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பயணிகளின் பொறுப்புணர்வு அதிகரிக்கும், தேவையின்றி பெயர் கெட்டுப்போவது தவிர்க்கப்படும் என்று ரெயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.