தமிழ்நாடு பட்ஜெட்: விமர்சித்த எடப்பாடி பழனிசாமி - பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!
எதிர்கட்சித் தலைவர்வர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
விமர்சனம்
தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை பட்ஜெட்டை நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் உயர்ந்துள்ளது.
வரவு செலவு திட்டத்தில் குளறுபடி உள்ளது. திமுக அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.
மக்களுக்கு எந்தவொரு புதிய திட்டமும் இல்லை" என விமர்சனம் செய்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
பதிலடி
இது தொடர்பாக பேசிய அவர் "தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்களுக்கு பயன் தரும் என மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை மக்கள் பரிசளித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார்கள்.
தமிழ்நாட்டின் கடனை அடைக்கும் வழிகளையும், வருவாயைப் பெருக்கும் வழிகளையும் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. கடமையைச் செய்யத் தவறிக் தமிழ்நாட்டின் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் கடந்த பத்தாண்டுகால அதிமுக அரசின் சாதனை.
பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமையைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் அதிமுகவின் சாதனை" என்று தெரிவித்துள்ளார். .