கடனில் உங்க கமிஷன் எவ்வளவு? அண்ணாமலை, தங்கம் தென்னரசு மோதல்

Tamil nadu K. Annamalai Thangam Thennarasu
By Karthikraja Mar 03, 2025 07:30 PM GMT
Report

 பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலை கேள்வி

தமிழ்நாட்டின் 2025-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச் 14 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். 

அண்ணாமலை

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, திரு மு.க.ஸ்டாலின்?" என தெரிவித்துள்ளார். 

தமிழக போக்குவரத்து கழக கடன் 3 மடங்கு அதிகரிப்பு - CAG அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

தமிழக போக்குவரத்து கழக கடன் 3 மடங்கு அதிகரிப்பு - CAG அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

தங்கம் தென்னரசு பதில்

இதற்கு பதிலளித்து தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ? 

தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல" என கூறினார்.

கமிஷன் எவ்வளவு

அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, "எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களைக் கூறி, ஆட்சிக்கு வந்த பின், சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது திமுக.

தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது. 2004 – 2014 வரையிலான 10 ஆண்டுகள், காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலைத் தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 2014 – 2024 வரை, பத்து ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம். 

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்கள், மெட்ரோ திட்டங்கள் என, தமிழக முதலமைச்சரும், திமுக அமைச்சர்களும், தினந்தோறும் பயன்படுத்தும் போக்குவரத்து தொடங்கி, தமிழகத்தில் உங்கள் கண்முன்னே மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு எத்தனை? மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக?

உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம். வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்" என கேள்வி எழுப்பியுள்ளார்.