தமிழக போக்குவரத்து கழக கடன் 3 மடங்கு அதிகரிப்பு - CAG அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
கர்நாடகா, கேரளா போக்குவரத்து கழகத்தை விட தமிழ்நாட்டிற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக CAG அறிக்கை தெரிவித்துள்ளது.
சிஏஜி அறிக்கை
சென்னை தேனாம்பேட்டையில் இன்று (10.12.2024) மாலை இந்திய கணக்கு தணிக்கை துறையினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
2023 ஆம் ஆண்டு மார்ச் 31 நிறைவடைந்த நிதி ஆண்டிற்கான, தமிழ்நாடு அரசு மீதான மாநில நிதி தணிக்கை சிஏஜி அறிக்கையை(CAG Report) முதன்மை கணக்காய்வு துறை தலைவர் ஜெய்சங்கர் வெளியிட்டார்.
உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தமிழ்நாட்டில் 2021-2022ல் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2022-2023ல் 36,215 கோடியாக குறைந்துள்ளது முந்தைய ஆண்டின் வருவாய் வரவுகளை விட 2022-2023ல் 17% வருவாய் அதிகரித்துள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GSDP) 23.64 லட்சம் கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டு ரூ.17,88,074 கோடியாக இருந்தது. தனிநபர் உள்நாட்டு உற்பத்தியின் தேசிய சராசரி ₹1,96,983 ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டின் சராசரி ₹3,08,020 ஆக உள்ளது.
மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்துவதில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் 28% காலிப்பணியிடங்கள் உள்ளது. தனி வாரியம் இருந்தும்கூட பணியாளர்களை புதிதாக சேர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து கழக கடன்
2017 ஆம் ஆண்டிற்கு முன்பு 6,467 கோடியில் இருந்த தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தின் கடன் மதிப்பானது, மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 21,980 கோடியாக உயர்ந்துள்ளது. ஊழியர்களின் செலவினமானது, 55.20% முதல் 63.5% வரை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து கழக ஊழியர்களை வேறு பணிக்கு அனுப்பியதால், ரூ.495 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா , கேரளா போக்குவரத்து கழகங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
2017-2021 காலகட்டத்தில் முதலமைச்சரின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. 88 பயனாளிகள் கூடுதல் அறைகள், கார் பார்க்கிங் வசதியோடு கட்டியுள்ளனர். பசுமை வீடு கட்டும் திட்டத்தில் 429 பேர் பட்டா இல்லாமலேயே பயன் பெற்றுள்ளனர். 57 கிராமங்களில் 653 பயனாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 154 நபர்கள் மட்டுமே பயன்பெற்றுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.