சிக் லீவ் எடுப்பவரா நீங்கள்? வீட்டிற்கு ஆள் அனுப்பி சோதிக்கும் பிரபல நிறுவனம்
பிரபல நிறுவனம் ஒன்று சிக் லீவ் எடுக்கும் ஊழியர்களின் வீடுகளுக்கு சென்று சோதனையிட்டுள்ளது.
சிக் லீவ்
அலுவலகங்களில் பணி புரியும் பலருக்கும் வார விடுமுறை முடிந்து திங்கட்கிழமை மீண்டும் அலுவலகத்திற்கு செல்வதை நினைத்தாலே மனம் சோகத்தில் மூழ்கி விடும்.
இதனால் பலரும் உடல்நிலை சரியில்லை என ஏதாவது ஒரு காரணத்தை கூறி விடுமுறை எடுப்பது வழக்கம். சிலர் வேறு நிறுவனத்திற்கு நேர்காணல் செல்ல கூட உடல்நிலை சரியில்லை என கூறி விடுமுறை எடுப்பது உண்டு.
டெஸ்லா
தற்போது பிரபல நிறுவனம் ஒன்று அப்படி உடல்நிலை சரியில்லை என விடுமுறை எடுக்கும் ஊழியர்களின் வீடுகளுக்கு ஆட்களை அனுப்பி உண்மையாகவே உடல்நிலை சரியில்லையா அல்லது பொய்யான காரணங்களை கூறி விடுமுறை எடுக்கிறார்களா என சோதித்துள்ளது.
அந்த நிறுவனம் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லாதான். ஜெர்மன் நாட்டில் உள்ள டெஸ்லா கார் தொழிற்சாலை மற்றும் நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கத்தை விட அதிகமாக சிக் லீவ் எடுத்து வந்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 17% டெஸ்லா ஊழியர்கள் சிக் லீவ் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்ப்பு
இத்தகைய நடைமுறை கார்ப்பரேட் உலகில் மிகவும் சாதாரணமானது என்று டெஸ்லா ஜிகாஃபேக்டரி-ன் நிர்வாக தலைவர் ஆண்ட்ரே தியெரி, நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த செயலுக்கு டெஸ்லா ஊழியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கார்ப்ரேட் ஊழியர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. "ஊழியர்கள் பற்றாக்குறையால் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்ளும் ஊழியர்கள் உடல் நல பாதிப்பை எதிர்கொள்கின்றனர், அவர்களை வீட்டிற்கு வந்து சோதிப்பது தவறு" என தொழிற்சங்கங்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.