உணவில் விஷம்; ஹோட்டல் அறையில் சிறை - டென்னிஸ் வீரர் பகீர் குற்றச்சாட்டு!
முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிக் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
நோவாக் ஜோகோவிக்
பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிக் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக, கடந்த 2022ல் ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையம் சென்றிருந்தார்.
அப்போது கொரோனா தொற்று பரவிய காலம் என்பதால், மருத்துவப் பரிசோதனைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரது விசா ரத்து செய்யப்பட்டது. மேலும், தடுப்பூசியும் போடாததால் விளையாடுவதைத் தடுத்து, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து ஒரு சில நாட்கள் ஆஸ்திரேலியா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மெல்போர்னில், புத்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் ஜன. 12-26ல் நடக்கவுள்ளது.
பகீர் குற்றச்சாட்டு
இத்தொடரில் 10 முறை கோப்பை வென்றுள்ள, உலகின் நம்பர்-7 வீரர், செர்பியாவின் ஜோகோவிச் 37, முதல் சுற்றில் ஆஸ்திரேலிய இளம் வீரர் நிஷேசை எதிர்கொள்கிறார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன.
இதற்கு கொரோனா காலத்தில் மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலில் நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எனக்கு தரப்பட்ட விஷத்தன்மை கொண்ட உணவுதான் காரணம். நான் செர்பியாவுக்குத் திரும்பி வந்தபோது தான் எனக்கு இது தெரிய வந்தது. இதை நான் யாரிடமும் பகிரங்கமாகச் சொன்னதில்லை.
செர்பியாவுக்குத் திரும்பியதும் நடத்தப்பட்ட நச்சு சோதனையில், எனது உடல் ரத்தத்தில் ஈயம், பாதரசம் உள்ளிட்டவை அதிகப்படியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மெல்போர்ன் அல்லது ஆஸ்திரேலியா மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை.
எனக்கு மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு முறை நான் ஆஸ்திரேலியா வந்தபோதும், பாஸ்போர்ட் பரிசோதனைக்கு சென்றபோது எனக்கு பழைய நினைவுகள் பெரும் வேதனையை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.