படியில் பயணம் செய்த சிறுவனை கண்டித்த நடத்துனர்..கத்திக்கோலால் குத்திய கொடூரம் - பகீர் பின்னணி!
நடத்துநரை 17 வயது சிறுவன் கத்திக்கோலால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டம் துலுக்கநத்தம் பகுதியில் 17 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, 17 வயது சிறுவன் மதுபோதையிலிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி அவர் பயணம் செய்துள்ளார்.இதனைக் கண்ட பேருந்து நடத்துநர் மாடசாமி சிறுவனை கண்டித்து இருக்கையில் அமரும்படி கூறியுள்ளார். ஆனால் நடத்துநரின் பேச்சைக் கேட்காத அந்த சிறுவன், தொடர்ந்து மது போதையில் ஆபாச வார்த்தைகளால் பேசி ரகளை செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பேருந்து நடத்துனர் மாடசாமி பாவூர்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் கோபமடைந்த 17 வயது சிறுவன் அதே பேருந்து மீண்டும் வரும் வரையில் பேருந்து நிறுத்தத்திலேயே காத்திருந்துள்ளார்.
17 வயது சிறுவன்
மீண்டும் பேருந்து பாவூர்சத்திரம் வந்தபோது, பேருந்தின் நடத்துநரைச் சிறுவன் மறைத்து வைத்திருந்த கத்திக்கோலால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த நடத்துநர் மாடசாமி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம், குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரில் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.