கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவனை கொலை செய்த மனைவி - போலீசையே மிரள வைத்த சம்பவம்
கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நண்பருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்
தென்காசி மாவட்டம், வென்றிலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் வைரவசாமி. இவருடைய மனைவி முத்துமாரி. முத்துமாரிக்கும், இசக்கிமுத்து (29) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இவர்களின் கள்ளக்காதல் குறித்து வைரவசாமிக்கு தெரியவந்தது. இவர்களின் இந்த உறவை பல முறை வைரவசாமி கண்டித்துள்ளார். ஆனாலும், இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இதனால், வைரவசாமிக்கும், முத்துமாரிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கணவரின் தொல்லை தாங்க முடியாமல் முத்துசாமி, கள்ளக்காதலன் இசக்கியுடன் சேர்த்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
கணவனை கொலை செய்த கள்ளக்காதலன்
இந்நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு பைக்கில் வைரவசாமியும், முத்துமாரியும் வீடு திரும்பி வந்துக்கொண்டிருந்தனர். அப்போது, கள்ளக்காதலன் தனது கூட்டாளியுடன் கொள்ளையர்கள் போல பின்தொடர்ந்து வந்து வைரவசாமியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, முத்துமாரியின் ஆடைகளை கிழித்து விட்டு நகைகளை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதன் பின்னர், நடுரோட்டில் முத்துமாரி கத்தி கூச்சலிட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் ஓடி வந்து பார்க்கையில் கணவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நாடகமாடிய மனைவி
உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வைரவசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, முத்துமாரியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
3 பேரை கைது செய்த போலீசார்
இதனால் சந்தேகமடைந்த போலீசார் முத்துமாரியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பயந்து போன முத்துமாரி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கள்ளக்காதலன் இசக்கிமுத்து, அவரது கூட்டாளிகள் காளிராஜ், அங்குராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.