ஒரே ஒரு மாணவி படித்து வந்த அரசுப் பள்ளி தற்காலிக மூடல் - என்ன காரணம்..?
ஒரே ஒரு மாணவி படித்து வந்த அரசுப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஒரே ஒரு மாணவி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடம்பூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் நாளடைவில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வந்தது. இறுதியாக ஒரே ஒரு மாணவி மட்டுமே இந்த பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில் அந்த மாணவியும் அருகிலுள்ள குருந்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே இந்த பள்ளியில் பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர் ஒருவர், முள்ளிமுனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாற்றுப்பணி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
தற்காலிக மூடல்
அதேபோல் இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியரும் அருகிலுள்ள கவலை வென்றான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மாற்றம் செய்யப்பட்டார். இதனால் கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் இந்த பள்ளியில் இந்த கல்வியாண்டின் முதல் பருவத்திற்குள் குறைந்தபட்சம் 5 மாணவ-மாணவிகளை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மாணவர்கள் சேரும்பட்சத்தில் இந்த பள்ளி மீண்டும் செயல்படத் தொடங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.