15 லட்சம் பீர் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட புத்தர் கோவில் - சுடுகாடு கூட பாட்டில்கள்தானாம்!
பீர்பாட்டில்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட புத்தர் கோவில் பற்றிய தகவல்.
பீர் பாட்டில் கோவில்
தாய்லாந்து நாட்டின் சிசாகெட் மாகாணத்தின் குன் ஹான் மாவட்டத்தில் 'வாட் பா மஹா செடி காவ்' கோவில் அமைந்துள்ளது. இது ஒரு அழகான புத்த கோவில். இது 1.5 மில்லியனுக்கும் அதிகமான வெற்று பீர் பாட்டில்களால் கட்டப்பட்டுள்ளது.
இந்த பீர்பாட்டில் கோவில் 'கிரேட் கிளாஸ் பகோடாவின் வனப்பகுதி கோயில்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டில் புத்த பிக்ஷு ஒருவர் காலியான பீர்பாட்டில்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளார். அந்த பாட்டில்களை வைத்து முதலில் பிரதான கோவிலில் கட்டுமானம் தொடங்கப்பட்டது.
அதன் பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டு கோயில் வளாகம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன. கோவில் முழுவதுமாக பாட்டில்கள் அடுக்கி கட்டப்படவில்லை. சிமிண்ட் கலவையின் மீது பாட்டில்களை அடுக்கி கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டிடத்தின் முக்கிய கட்டுமானப்பொருள் பீர் பாட்டில்தான்.
நிலத்திற்கு அடியில் சுரங்க வீடு; நிம்மதியான வாழ்க்கை..டிவி கூட இருக்கு - ஏன் இப்படி வாழ்கிறார்கள் தெரியுமா?
சுடுகாடு கூட பாட்டில்கள்
கோவிலில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்னணி அலங்காரமும் பீர் பாட்டில்களால் தான் செய்யப்பட்டுள்ளது. கோவிலின் உட்புற சுவர் வெளிப்புற சுவர் என்று எல்லா பக்கமும் பாட்டில்களாக மட்டுமே தெரியும்.
கோயிலின் பூஜை அறைகள், பொது குளியலறைகள், தண்ணீர் டேங்க் மற்றும் சுடுகாடு ஆகியவையும் கண்ணாடி பீர்பாட்டில்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான பாட்டில்கள் வழியாக சூரிய ஒளி படும்போது அது ஒரு மயக்கும் மற்றும் அற்புதமான காட்சியை உருவாக்குகிறது. ஆரம்பத்தில் துறவிகள் மட்டும் பாட்டில்களை சேமித்தனர். பின்னர் உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து உதவியைப் பெற்றனர்.
மேலும் சுற்றுலாப் பயணிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவங்களும் பீர் பாட்டில்கள் சேகரித்துக் கொடுத்துள்ளனர். இந்த கோவில் ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், மறுசுழற்சி, நிலைத்தன்மை மற்றும் மனித படைப்பாற்றலுக்கு ஒரு சிறந்த சான்றாக விளங்கி வருகிறது.
மேலும் இந்த ஆச்சரியமான கோவில் புத்த மத பயணிகளை மட்டும் ஈர்க்காமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மறுசுழற்சி, மறுபயன்பாடு பற்றி பேசும் மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.