Bigg Boss: அதிரடியாக கைது செய்யப்பட 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர்..! என்ன காரணம்..?
தெலுங்கு பிக்பாஸ் சீசன்7 வெற்றியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய தெலுங்கு பிக்பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் பைனல்ஸ் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. பல்லவி பிரசாந்த், அமர்தீப் என 2 போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் பல்லவி பிரசாந்த் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
பல்லவி பிரசாந்த் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி, விவசாயம் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்த இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இருந்து அனைவரும் வெளியே வந்தனர்.
வெற்றியாளர் கைது
அப்போது பல்லவி பிரசாந்த் ரசிகர்களுக்கும், 2ம் இடம் பிடித்த அமர்தீப் சவுத்ரியின் ரசிகர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பல்லவி பிரசாந்தின் ஊர்க்காரர்கள் மற்றும் ரசிகர்கள் அங்கிருந்த கார் கண்ணாடிகளை உடைத்தனர்.
ஆட்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். மேலும், பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகளையும், அரசு பஸ்ஸையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பல்லவி பிரசாந்த் மற்றும் அவரது சகோதரர் மஹாவீர் உட்பட 14 பேர் மீது பஞ்சகுட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அதன்படி அனைவரும் ஹைதராபாத் சஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டனர்.