SIM Card வாங்கப்போறீங்களா..? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க.. - 3 ஆண்டு சிறை!
சிம் கார்டு மோசடிகளை தடுக்கும் நோக்கில் திருத்தியமைக்கப்பட்ட தொலைத் தொடர்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு மசோதா
தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், குற்ற வாய்ப்புகள் உட்பட பல் நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் விதமாக திருத்தியமைக்கப்பட்ட தொலைத் தொடர்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
கடந்த புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, வியாழன் அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மசோதாவை அறிமுகம் செய்து, குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
3 ஆண்டு சிறை
சிம்கார்டு மோசடிகளைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள இந்த புதிய மசோதாவால், சிம் கார்டு வாங்க விரும்புவோருக்கான கேஒய்சி (KYC) நடைமுறைகளுக்கு விதிமுறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் போலி ஆவணங்களை சமர்பித்து முறைகேடாக சிம் கார்டு வாங்குவோருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், சிம் பாக்ஸ் கொண்டு முறைகேடாக தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்துவோருக்கு, 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.