தினசரி ரயில் டிக்கெட் எடுக்கும் கிராம மக்கள்; ஆனால் பயணிப்பதே இல்லை - என்ன காரணம்?
ரயில்கள் நின்று செல்வதற்காக தினசரி டிக்கெட் எடுத்து வரும் கிராம மக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ரயில் நிலையம்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் நெகோண்டா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள நெகோண்டா ரயில் நிலையத்தில் திருப்பதி, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் நின்று செல்வதில்லை.
இதுகுறித்து கிராம மக்கள் கேட்டதற்கு, 3 மாதத்துக்கு வருமானம் இருந்தால் மட்டுமே இங்கு ரயிலை நிறுத்திச் செல்லமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பயணிகளின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் செகந்திராபாத்திலிருந்து குண்டூருக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
டிக்கெட் மன்றம்
இந்த ஒரு ரயிலையும் இழந்துவிடக் கூடாது என்பதற்காக நெகோண்டா கிராம மக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் 'நெகோண்டா டவுன் ரயில்வே டிக்கெட் மன்றம்' என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கினார். இந்த குழுவில் 400 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்கள் மூலம் ரூ. 25,000 நன்கொடை பெறப்பட்டது.
இந்த பணத்தின் மூலம் நெகோண்டாவில் இருந்து கம்மம், செகந்திராபாத் மற்றும் பிற இடங்களுக்கு ரயில் 60-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை தினசரி வாங்குகின்றனர். ஆனால் இந்த டிக்கெட்டுகளை அவர்கள் பயணிக்க பயன்படுத்துவதில்லை. இதனை ரயில் நிலையத்துக்கு வருமானம் காட்டுவதற்காகவே செய்வதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.