புயலின் அபாயம்.. 9 துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் - வானிலை மையம்!
அரபிக் கடலில் புயல் வலுப்பெற்று வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல்
அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘தேஜ்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், "தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 21-ல் (நேற்று) தொடங்கியுள்ளது. அக்டோபர் 21-ம்தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘தேஜ்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து தீவிர மற்றும் மிக தீவிர புயலாக வலுப்பெற்று, ஏமன், ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லும். இதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை" என்றார்.
வலுப்பெறும் தேஜ் புயல்
இதனை தொடர்ந்து, அவர் கூறுகையில், "புயல் காரணமாக வரும் 25-ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அக். 22-ல் வலுப்பெற்று, வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும்.
எனவே, வரும் 26-ம் தேதி வரை வங்கக் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை" என்று கூறியுள்ளார்.
தற்பொழுது புயல் எச்சரிக்கையை அறிவுறுத்தும் வகையில் எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.