அதிபர் போஸ்டருக்கு ஹிட்லர் மீசை வரைந்த 16 வயது சிறுவன் - சிறையில் அடைத்த அரசு!
துருக்கி அதிபரின் போஸ்டரில் ஹிட்லர் மீசை வரைந்த காரணத்திற்காக சிறுவனை சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர்
துருக்கியில், கடந்த 20 ஆண்டுகளாக தனது அதிபர் பதவியை தக்கவைத்துக்கொண்டவர் எர்டோகன். சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று தற்போது 3-வது முறையாக துருக்கியின் அதிபராக உள்ளார்.
அந்த தேர்தலின்போது இவரது போஸ்டர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு 16 வயதான சிறுவன் ஹிட்லரை போன்ற மீசை வரைந்து வைத்திருந்தார், மேலும், அதில் அவமதிக்கும் கருத்துக்களும் எழுதப்பட்டிருந்தது. அது சமூக வலைத்தளங்களில் பரவிய வந்தது.
சிறுவன் கைது
இந்நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து மீசை வரைந்த அந்த சிறுவன் யார் என்று கண்டறிந்தனர். தொடர்ந்து, காவல் துறையினர் அந்த சிறுவனின் வீட்டை கண்டறிந்து வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்பொழுது அந்த சிறுவன் தான் மீசை வரைந்ததை ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து, அந்த சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், அதிபரை அவமதித்ததின் காரணமாக சிறுவனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அந்நாட்டு நீதி அமைச்சகத்தை பொறுத்தவரையில், அதிபரை அவமதிப்பது குற்றமாகும். மேலும், இந்த குற்றத்திற்காக கடந்த ஆண்டு 16,753 பேருக்கு தணடனை வழங்கப்பட்டது.