தொடர் போராட்டம்.. சத்தமிட்டு சொன்னோம், இனி ரத்தமிட்டும் சொல்லுவோம் - ஆசிரியர்கள் தீவிரம்!
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்
தமிழ்நாட்டில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 14 ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் தீவிரம்
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், போராட்டத்தை கைவிடாமல் உறுதியாக இருந்து வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனாலும், முதல்வர் பதிலளிக்கவேண்டும் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருவல்லிக்கேணி காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு நேற்று இரவு 8 மணி வரை கெடு அளிக்கப்பட்டது.
ஆனால் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் சார்பில் முறையான அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் கூறினர்.
இது குறித்து டெட் ஆசிரியர் சங்கத்தினர், "ஏற்கனவே பல முறை போராடியபோதும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தது, ஆனால் செய்யவில்லை. முதல்வர் உறுதி அளித்தால் தான் நாங்கள் இப்போது திரும்பிச் செல்வோம்.
இல்லையென்றால் போராட்டம் இன்னும் தீவிரமடையும். இதுவரை சத்தமிட்டுச் சொன்னோம், இனியும் கேட்கவில்லையென்றால் ரத்தமிட்டுச் சொல்வோம். எங்கள் வேதனை எங்கள் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்" என்று கூறியுள்ளனர்.