இன்று பள்ளிகள் திறப்பு.. விடுப்பு எடுத்து தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்!
பள்ளிகள் திறக்கும் நிலையில் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். n
ஆசிரியர்கள்
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேருக்கு உடல்நலம் பாதிப்படைந்துள்ளது.
தொடர் போராட்டம்
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியபோது தீர்வு எதுவும் எட்டவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று மாலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 3 பிரிவுகளை சேர்ந்த ஆசிரியர்களும் இன்று முதல் விடுப்பு எடுத்து போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்து உள்ளனர். இதனால், போராட்டமானது நேற்று இரவும் தொடர்ந்தது. காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நிலையில் ஆசிரியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து இருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.