அதைச் செய்யத் தவறிய தமிழக அரசு.. வட தமிழகத்தை முன்னேற்ற முடியாது - கேள்விகளால் துளைத்த ராமதாஸ்!
ஆசிரியர் காலி பணியிடங்களில் 72% வட மாவட்டங்களில் தான் .எனவே மாவட்ட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் பாமக நிறுவனர் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,'' கல்வியில் வட மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு தமிழக அரசும் மறைமுகமாக துணை போகிறது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களும் அரசுக்கு பொதுவானவை. அனைத்து மாவட்டங்களையும் அரசு சமமாக நடத்த வேண்டும்.
ஆனால், தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் முழு அளவில் பணி புரிவதையும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு தடையின்றி கல்வி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் அரசு, அதே அக்கறையை வட மாவட்டங்கள் மீது காட்ட மறுப்பது ஏன்? என்பதே என் வினா.
பொதுக்கலந்தாய்வின் மூலமாகவே ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது என்று கூறி தமிழக அரசு ஒதுங்கிக் கொள்ள முடியாது.பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதற்கு முன்பாக மாநில அளவில் எத்தனை விழுக்காடு காலியிடங்கள் உள்ளனவோ,
ஒதுக்கீடு
அதே அளவிலான காலியிடங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தான் இடமாறுதல் கலந்தாய்வு விதிகள் வகுக்கப்பட வேண்டும்.அவ்வாறு செய்திருந்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அளவில் காலி பணியிடங்கள் இருந்திருக்கும்.
அதைச் செய்யத் தவறியதால் தான் தென் மாவட்டங்களில் காலியிடமே இல்லாத நிலையில், வட மாவட்டங்களில் மிக அதிக காலியிடங்களும் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
வட மாவட்டங்களில் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், தென் மாவட்டங்களில் மிக அதிகமாக இருப்பதும் பல பத்தாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலை மாற்றப்படாத வரை கல்வியில் வட தமிழகத்தை முன்னேற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.