மத்தியில் நரேந்திர மோடி பிரதமராவது உறுதி; தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகள் - ராமதாஸ் பேச்சு!
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதில் எந்த தவறும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்போது மத்தியில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி செய்யப்படும்.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 400-க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. தமிழ்நாட்டில் பாஜக-பாமக கூட்டணி 20-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதில் எந்த தவறும் இல்லை.
தோல்வி பயம்
தேர்தல் நடத்தை விதிகளுக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை. தியானம் மேற்கொள்வது ஒவ்வொரு தனி நபரின் உரிமை அந்த உரிமை பிரதமருக்கும் உண்டு. இதை தேர்தல் பரப்புரையாக கருத முடியாது.
கடந்த 2019 தேர்தலின்போதும் இறுதி கட்ட தேர்தலின்போது உத்தரகாண்ட் பகுதி இமயமலையில் உள்ள கேதார்நாத்தில் தியானம் செய்தார் அப்போது எதுவும் பேசாத எதிர்கட்சிகள் தற்போது விமர்சிப்பது காரணம் தோல்வி பயம்தான்" என்று தெரிவித்துள்ளார்.